கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான சுவாசப்பிரச்சினை அறிகுறிகள் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு மூளையில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டு பிடிக்கும் முயற்சி ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் கெரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு மூளை பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கும், தொற்றிலிருந்து விடுபட்டவர்களில் மட்டுமே இந்த மூளை பாதிப்பை அதிக அளவில் பார்க்க முடிவதாக விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். சிலருக்கு கொரோனாவின் முதல் அறிகுறியாக இந்த மூளை பாதிப்பு இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தொடங்கியது முதல் தற்போதுவரை, மூளை பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 பேரிடம் மேற்கொண்ட சோதனையில் 12 பேருக்கு மூளை வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 10 பேருக்கு மயக்கம் இருந்ததும், 8 பேருக்கு நரம்பு பாதிப்பு இருந்ததும், மேலும் 8 பேருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தக் கூடிய நரம்பு மண்டல பாதிப்பு இருந்தததாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.