கேரள தங்க கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, ஐக்கிய அரபு அமீரக தூதரக அலுவலகத்தில் தங்கம் கடத்தியது தொடர்பாக சரித் குமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவாக உள்ள நிலையில், முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், தன்மீதான புகாரில் உண்மையில்லை என்றும் தற்கொலை செய்துகொள்வேன் எனவும் ஸ்வப்னா ஆடியோ பதிவில் மிரட்டல் விடுத்துள்ளார். இந்நிலையில், கேரள தங்க கடத்தல் வழக்கை விசாரிக்க, தேசிய புலனாய்வு முகமைக்கு அனுமதி அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முதலமைச்சர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றனர். தடையை மீறி போராட்டம் நடத்தியதால் காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.