ஹாங்காங்கில் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவு

ஹாங்காங்கில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூட உத்தரவு


ஹாங்காங்கில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் திறக்கப்பட்ட பள்ளிகள் மீண்டும் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 


சீனாவை தொடர்ந்து அதன் அண்டை நாடான ஹாங்காங்கிலும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சீனாவுடனான எல்லையை மூடிய ஹாங்காங் அரசு, ஊரடங்கு விதிமுறைகளையும் கடுமையாக அமல்படுத்தியது. மேலும் வைரஸ் பரவலால் அரசுக்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டன



இந்த துரித நடவடிக்கை காரணமாக ஹாங்காங்கில் வைரஸ் பாதிப்பு விரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. அத்துடன் ஹாங்காங்கில் பள்ளிகளும் திறக்கப்பட்டன.  இந்நிலையில் கடந்த சில தினங்களாக அங்கு வைரஸ் பாதிப்பு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. 


நேற்று ஒரே நாளில் மட்டும் அங்கு புதிதாக 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 34 பேர் பயணத்தொடர்பு எதுவும் இன்றி உள்நாட்டிலேயே பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நோய் பாதிப்பு மேலும் அதிகாரிக்காமல் தடுக்க அங்கு திறக்கப்பட்டுள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது.