பணி நீக்கம், சம்பளக் குறைப்பு.. இந்தியாவில் 13 கோடி வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்து..

கொரோனா ஊரடங்கு எதிரொலியால் பல்வேறு நிறுவனங்கள் ஊதிய குறைப்பில் ஈடுபட்டுள்ளதால், வீட்டு வாடகை, வங்கி கடன் தவணைகளை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மாத சம்பளம் பெறுவோர் கவலை தெரிவித்துள்ளனர்.


கொரோனா தாக்கத்தால், இந்தியாவில் 13 கோடி வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதில், சென்னை போன்ற பெருநகரங்களில் பல்வேறு துறை நிறுவனங்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என அதன் ஊழியர்கள் குமுறுகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் வருவாய் இழப்பு குறைந்ததாக கூறி, பொறியியல், ஐ.டி, கட்டுமானம் என பல்வேறு துறை நிறுவனங்கள், 5 முதல் 50 விழுக்காடு வரை ஊதிய குறைப்பு செய்வதாக பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். சில நிறுவனங்களோ, மூன்று மாதம் வரை சம்பளம் கொடுப்பதையே நிறுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

வேலைவாய்ப்பு குறைந்தே காணப்படுவதாக தத்தமது துறை சார்ந்தவர்கள் ஆதங்கம் கொள்கின்றனர். இந்நிலையில், கொரோனாவை காரணம் காட்டி ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பில் நிறுவனங்கள் ஈடுபடுவதால் எதிர்காலமே கேள்விக்குறியானதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.